முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீட் தேர்வு வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை கொண்ட மாநில கல்விக் கொள்கை அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்து. மேலும் மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு மாநில கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை அமைத்தது. குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் நியமிக்கப்பட்டார். நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு இணைந்து கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையை தயாரித்துள்ளது. இதனை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குழுவினர் சமர்பித்தனர். அதில், 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையே பள்ளிகளில் தொடர வேண்டும் என்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வு தமிழக பள்ளிகளில் தொடர வேண்டும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்றும் நீட் தேர்வு தேவையற்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்ஜிஆர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்களாக அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கல்லூரி முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் சிபிஎஸ்சி, Deemed University Deemed University ஆகியவற்றிற்கான கட்டணங்களை சீரமைப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வயது பூர்த்தியாளர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும் என்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மாநில கல்விக்கொள்கை பரிந்துரையில் இடம்பெற்றுள்ளன.