முதலமைச்சர் ஸ்டாலினை தனியாக சந்தித்த ஓபிஎஸ்?

Filed under: அரசியல் |

எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் தனியாக சந்தித்தது அதிமுகவிற்கு எதிராக சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு, அவரது எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி இனி செல்லாது என கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓபிஎஸ்க்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். ஆனால் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி “நேற்று சட்டமன்றம் முடிந்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஓ.பன்னீர்செல்வமும் அரை மணி நேரம் தனியாக பேசியுள்ளனர். அதிமுக கட்சி முடிவுகள் மற்றும் பொருப்பாளர்கள் பட்டியல் சபாநாயகருக்கு வழங்கப்பட்டிருந்த போதும் அதை மீறி ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவை ஒழிக்க முதலமைச்சர் செய்யும் முயற்சிகள் பலிக்காது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.