சிறுமியை வன்கொடுமை செய்ததாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர். இவரது வீட்டிற்கு கடந்த 2ம் தேதி பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் கல்வி தொடர்பான உதவி கேட்டு சென்றுள்ளார். அப்போது எடியூரப்பா சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியே சொல்லாமல் இருந்தால் தேவையான உதவிகளை செய்வதாகவும், வெளியே சொன்னால் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என எடியூரப்பா மிரட்டியதாக அந்த 17 வயது சிறுமியும், அவரது தாயாரும் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், இச்சம்பவம் உண்மைதானா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.