மூடநம்பிக்கையால் இளைஞர் பலி!

Filed under: இந்தியா |

கங்கை நதியில் பாம்பு கடிபட்ட இளைஞரை மூடநம்பிக்கையால் மிதக்கவிட்டதால் அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து விதமான நோய்களுக்கும் இன்றைய காலக்கட்டத்தில் நவீன மருத்துவமுறைகள் இருந்தாலும், சில மூடநம்பிக்கைகள் காரணமாக மோசமான விளைவுகளை தேடிக் கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் புலன்சாகர் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியைச் சேர்ந்த வருமாவரித்துறை ஊழியரான விஜய் சிங்கின் இளைய மகன் மோஹித் அனுப்சாகர் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக மோஹித் வீட்டிற்கு வந்திருந்த போது அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. உடனடியாக மோஹித்தை அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயாராகியுள்ளனர். ஆனால் அவர்களது உறவினர்கள் சிலர் விஷக்கடிக்கு எந்த மருத்துவமும் பலிக்காது என்றும், கங்கை நதி நீர் விஷத்தை முறிக்கும் தன்மையுடையது என்றும் கூறி இளைஞரை கங்கை நதியில் மிதக்க செய்யலாம் என அறிவுக்கு புறம்பான வழியை சொல்லியுள்ளனர். அதையும் நம்பிய மோஹித்தின் பெற்றோரும் மற்றவர்களுடன் இணைந்து மோஹித்தை துணியை தோல்பட்டையில் சுற்றி கயிறால் கட்டி கங்கை நதியில் மிதக்க விட்டுள்ளனர். 2 நாட்கள் அப்படி மிதக்கவிட்டால் மோஹித்தின் விஷம் முறிந்துவிடும் என எல்லாரும் நம்பியதுதான் ஆச்சர்யம். ஆனால் பாவப்பட்ட மோஹித் விஷம் உடலில் ஏறி பரிதாபமாக பலியானதுடன், அவரது உடல் 2 நாட்களாக கேட்பாரற்று கங்கை நதியில் மிதந்துக் கொண்டிருந்துள்ளது. இறுதியாக அவரது உடல் மீட்கப்பட்டு முறைப்படி சடங்குகள் செய்து எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இளைஞர் மோஹித் உடல் கயிறில் கட்டப்பட்டு நீரில் மிதக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.