மூன்று மாம்பலம் 10 லட்சமா?

Filed under: உலகம் |

மூன்று மாம்பழங்களை 10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்த சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது.

வவுனியா மாவட்டம் கணேசபுரம் பகுதியிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் அலங்கார திருவிழா உற்சவம் நடைபெறுகிறது. இதன்படி, திருவிழா உற்சவத்தின் விசேஷ பூஜைகள் நேற்றைய தினம் நடைபெற்றது. அப்போது, விநாயகருக்கு மாம்பழங்கள் மற்றும் மாலை அணிவித்து, பூஜைகள் செய்யப்பட்டது. விநாயகருக்கு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் மற்றும் மாலைகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட மாம்பழங்கள் மற்றும் மாலையை ஏலத்தில் எடுப்பதற்காக பலரும் முன்வந்துள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த பலரும், இந்த ஏல விற்பனையில் கலந்துகொண்டுள்ளனர்.
மாம்பழங்கள் மற்றும் மாலை ஆகியன 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை ஏலத்தில் கோரப்பட்டுள்ளது. கணேசபுரம் பகுதியில் வசிக்கும் மோகன் குமார் குடும்பம் இறுதியாக 10 லட்சம் ரூபாவிற்கு ஏலத்தை கேட்டுள்ளனர். மாம்பழங்கள் மற்றும் மாலை ஆகியன 10 லட்சம் ரூபாவிற்கு இறுதியாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாவிற்கு மாம்பழங்கள் மற்றும் மாலை ஆகியவற்றை ஏலத்தில் பெற்றுக்கொண்ட மோகன்குமார், பேசும் போது, “கணேசபுரம் – சித்திவிநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு மாம்பழங்கள் படைக்கப்பட்டன. மாம்பழங்கள் விநாயகருக்கு விசேஷமானவை. பிள்ளையாருக்கு அணிவித்த பெரிய ஆண்டாள் மாலையொன்றும், இந்த மூன்று மாம்பழத்தையும் ஏலத்தில் விட்டார்கள்.

ஏலம் நடந்துகொண்டிருக்கும் போதே நாங்கள் கோவிலுக்கு போனோம். 2 லட்சத்துக்கு மேல் ஏலத்தில் போய் கொண்டிருக்கு, இந்தளவிற்கு கேட்க முடியாது என்று நினைத்தேன். கோவிலுக்கு ஒரு நேர்த்தி வைத்திருந்தோம். அதனால், அந்த நேர்த்தியுடன் கேளுங்கள் என குடும்பத்தார் கூறினார்கள். அதன் பிறகு இறுதியாக 9 லட்சத்து 70 ஆயிரம் வரை கேட்கப்பட்டது. நாங்கள் 10 லட்சம் ரூபாவிற்கு கேட்டோம். 10 லட்சம் ரூபாவோடு ஏலம் நிறைவு பெற்றது. இவ்வாறு ஏலத்தில் பெற்றுக்கொண்ட ஒரு மாம்பழத்தை ஆலயத்தில் வைத்து, பக்தர்களுக்கு பகிர்ந்தளித்தோம். ஏனைய இரண்டு மாம்பழங்களையும் வீட்டிற்கு கொண்டு வந்து, அதனை பூஜை அறையில் வைத்து, எமது குடும்பத்தாரும் உட்கொண்டோம். மூன்று மாம்பழங்களின் விதைகளை எங்களது மனையில் விதைக்க உள்ளோம்” என்று கூறினார்.