மோடியை புகழ்ந்து தள்ளிய கூட்டணி தலைவர்கள்!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக போவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலம், நாமக்கல், கரூர் தொகுதிகளுக்காக, சேலம் பனமரத்துப்பட்டி பிரிவு அருகேயுள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை கூட்டணி கட்சித் தலைவர்கள் கைகுலுக்கி வரவேற்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “மாற்றம் வேண்டும் என நினைத்து பாஜக கூட்டணியில் மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளோம். விளையாட்டுத்துறையில் அரசியலை ஒழித்தவர் பிரதமர் மோடி. சாதாரண பின்னணியிலிருந்து வந்தவர் பிரதமர் மோடி. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக போவது உறுதி” என்று தெரிவித்தார். பின் பேசிய ஓ. பன்னீர்செல்வம், “10 ஆண்டுகாலம் வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை தந்தவர் பிரதமர் மோடி. சிறப்பான எதிர்காலத்தை இந்தியாவுக்கு தந்த ஒரே பிரதமர் நரேந்திர மோடி. ஒரே அரசாணையில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி தந்தவர் பிரதமர் மோடி” என்று புகழாரம் சூட்டினார். “40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்” என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.