ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கு: இந்தி படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை !

Filed under: இந்தியா,சினிமா,தமிழகம் |

rajini_2058821fநடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில், இந்தி திரைப்படம் ஒன்றுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்தியில் தயாராகியுள்ள படம் ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ (Main Hoon Rajinikanth). வர்ஷா புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருந்தது.

இந்த நிலையில், அப்படத்தை வெளியிடத் தடை கோரி நடிகர் ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.தமிழ்வாணன், ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

தன்னுடைய தனிப்பட்ட உரிமைகளில் இத்திரைப்படம் அத்துமீறு தலையிடுவதாக, நடிகர் ரஜினிகாந்த் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தில் தனது பெயரை அனுமதியின்றியும், தனது பெயரை தவறாகவும் பயன்படுத்தியுள்ளனர் என்பதால், அப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கோரியுள்ளார்.

அந்த மனுவில், ‘ரஜினிகாந்தின் நடிப்புத் திறனும், அவரது தனித்துவமும். திரைப்படங்களில் அவரது ஸ்டைல்களும், வசனங்களை பேசும் பிரத்யேக விதமும் அவருக்கு பெருமளவில் ரசிகர்களை பெற்றுத் தந்திருக்கிறது. அவரது ஸ்டைல் ஒரு மரபையே தோற்றுவித்திருந்தாலும், இயல்பு வாழ்க்கையில் அவர் எளிமையாகவே இருக்கிறார்.

இந்நிலையில், அவரது பெயரை தவறாக பயன்படுத்தும் வகையில் திரைப்படத்தை எடுப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்’ எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மே ஹூன் ரஜினிகாந்த்’ திரைப்படம் தொடர்பான பத்திரிகை செய்திகள், வீடியோ பதிவுகள், இணையதள செய்திகள் மற்ற பிற தகவல்கள் என அனைத்துமே தயாரிப்பாளர், ரஜினிகாந்தின் ‘சூப்பர் ஹீரோ’ அடையாளத்தையும் அவர் நடித்த பல்வேறு திரைப்படங்களில் இருந்து எடுத்து, அவற்றை கையாண்டிருப்பது தெரிய வந்துள்ளது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ படத்தின் தயாரிப்பாளர் ரஜினிகாந்தை அணுகி எழுத்துப்பூர்வமாகவோ, இல்லை வாய்மொழியாகவோ தனது திரைப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள், அவரது பெயர் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி பெறவில்லை.

இது வர்த்தக ரீதியாக குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ரசிகர்கள் மத்தியிலும் தேவையில்லாத குழப்பத்தை உருவாக்கியுள்ளது. எனவே இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று ரஜினி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படத்துக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் வழக்குத் தொடர்ந்திருப்பது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது.