குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உடல் முழு அரசு மரியாதையுடன் ராமேசுவரத்தில் பேக்கரும்பு எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்கம் முடிந்ததும் இஸ்லாமிய மத குரு தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்,
முன்னதாக, மோடியும், ராகுலும் டெல்லியில் இருந்து தனித்தனியாக மதுரைக்கு விமானம் மூலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ராகுல் காரில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி, மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார்.
கலாம் இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
அலைகடலென திரண்ட மக்கள்:
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சிறப்புத் தொழுகை:
இதனைத் தொடர்ந்து இன்று காலை அப்துல் கலாம் உடல் பள்ளிவாசல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் சார்பில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. தொழுகைக்குப் பின்னர் கலாம் உடல் நல்லடக்கத்துக்காக பேக்கரும்பு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கேரள, ஆந்திர, கர்நாடக முதல்வர்கள் வருகை:
கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கேரள ஆளுநர் பி.சதாசிவம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா ஆகியோர் ராமேஸ்வரம் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக ஆளுநர், அமைச்சர்கள் இறுதி அஞ்சலி:
கலாம் இறுதிச் சடங்கில், ஏற்கெனவே முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்ததன்படி அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி.பழனிச்சாமி, பி.பழநியப்பன், உதயகுமார் உள்ளிட்ட 7 பேரும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக ஆளுநர் ரோசய்யா, கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முப்படையினர் இறுதி மரியாதை:
அப்துல் கலாம் உடலுக்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்தினர்.
அரசியல் தலைவர்கள் அஞ்சலி:
தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அப்துல் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பாமக எம்.பி. அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாம், கடந்த 27-ம் தேதியன்று ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் கலாம் மறைந்ததாக தெரிவித்தனர்.
மக்களவை ஒத்திவைப்பு:
அப்துல் கலாம் இறுதிச் சடங்கை ஒட்டி மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.