திருப்பூர், மே 3
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த 112 பேர் கோவையிலுள்ள இ. எஸ். ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 108 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி சென்றுவிட்டனர். மீதமுள்ள நான்கு பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூரை அடுத்த இடுவாயை சேர்ந்த 50 வயது மற்றும் 24 வயதுள்ள 2 லாரி டிரைவர்கள் கடந்த 23ஆம் தேதி சென்னைக்கு சென்றனர். பின்பு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தர்பூசணி லோடு ஏற்றிக்கொண்டு கடந்த முப்பதாம் தேதி திருப்பூருக்கு காய்ச்சல் அறிகுறியுடன் வந்தடைந்தனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இருவரும் நேற்று முன்தினம் திருப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்துவிட்டு வீட்டு கண்காணிப்பில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர். பின்பு மருத்துவ பரிசோதனையில் 2 டிரைவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 114 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே உடுமலையை சேர்ந்த 48 வயதுள்ள ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையிலிருந்து குணமாகி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தற்போது புதியதாக 2 லாரி டிரைவர்கள் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் மொத்தம் ஐந்து பேர் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 26ம் தேதிக்கு பின் புதிய கொரோனா வைரஸ் தொற்று இல்லாததால் விரைவில் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறும் என பொதுமக்கள் காத்திருந்தனர் ஆனால் சென்னையில் இருந்து லாரியில் வந்த கொரோனாவால் ஆரஞ்சு மண்டலமாவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களை 14 நாட்கள் தனிமையில் வைத்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.
எப்படியோ லாரியில் வந்த கொரோனாவால் டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் மக்கள் அதிர்ச்சி அடைந்து நிம்மதியிழந்து கூண்டுக் கிளியாக இருப்பது மட்டும் உண்மை.