லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் மாநில எல்லைகளில் உள்ள அனைத்து ஆர்டிஓ சோதனை சாவடிகள் மற்றும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் அளித்த பேட்டியில், “இந்தியா முழுக்க உள்ள சோதனைச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். 16 மாநிலங்களில் இந்த சோதனை சாவடிகள் எடுக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் உள்ள சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும் என்று மாநில அரசுக்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், தென்னிந்திய மோட்டார் அசோசியேசன், லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மாநில சோதனை சாவடிகளில் வாகனங்கள் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்றாலும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வருகிற 25 ஆம் தேதி முதல் கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஊத்துக்கோட்டை ஆகிய மாநில எல்லை சோதனை சாவடிகளில் பணம் செலுத்த மாட்டோம், லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இந்த சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும். தற்போது அனைத்து விதமான வாகனங்களுக்கும் அனைத்து விதமான நடைமுறைகளும் ஆன்லைனில் வந்துவிட்டது. எனவே இந்த சோதனை சாவடிகள் தேவையற்றவை. எனவே பூந்தமல்லி உள்ளிட்ட மாநில எல்லையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளையும் அகற்ற வேண்டும். பூந்தமல்லி சோதனை சாவடிகளில் பகலில் எந்த வாகனத்தையும் நிறுத்துவது கிடையாது, சோதனை செய்வதில்லை. இரவு நேரத்தில் வாகனங்களை நிறுத்தி வசூல் செய்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. பணம் வசூலிக்க மட்டுமே இந்த சோதனை சாவடிகள் இயங்குகின்றன. எனவே இந்த சோதனை சாவடிகளை அகற்றவும், அதேபோல காலாவதியான சுங்கச்சாவடிகளையும் அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும். ஆர்டிஓ. செக் போஸ்ட் மற்றும் சுங்க சாவடிகளில் ஊழல் நடைபெறுகிறது. எனவே இவற்றை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.