பேஸ்புக் லைவ் விவாவத்தில் பங்கு கொண்ட சிவசேனா கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ மகனும், முன்னாள் கவுன்சிலருமான அபிஷேக் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த வினோத் கோசல்கர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். இவரது மகன் அபிஷேக் அப்பகுதியில் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். அபிஷேக் கவுன்சிலராக இருந்தபோதிலிருந்து சமூக ஆர்வலரான மோரிஸ் என்பவருடன் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில்தான் இருவரும் பேசி சமாதானம் ஆகியுள்ளார்கள். மோரிஸ் தனது அலுவலகத்தில் நடைபெற்ற புடவை வழங்கும் நிகழ்ச்சிக்காக அபிஷேக்கை அழைத்துள்ளார். பின் இருவரும் பேஸ்புக் லைவில் விவாதம் செய்துள்ளனர். பின்னர் அபிஷேக் கிளம்ப நினைத்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் மோரிஸ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக அபிஷேக்கை சுட்டார். இதில் அபிஷேக் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் மோரிஸ் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார். உடனடியாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இருவருமே உயிரிழந்தனர். பேஸ்புக் லைவில் நடந்த இந்த கொலை சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.