வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய மாநில அரசுகள்; பிரேமலதா!

Filed under: அரசியல்,தமிழகம் |

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பிரேமலதா கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நமது வெற்றி வேட்பாளராக ராமச்சந்திரனுக்கு நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திலே வாய்ப்பு கொடுத்து அமோக வெற்றியை இந்த தேர்தலில் தர வேண்டும். திமுகவினரும் சரி அவங்க பினாமிகளும் சரி இங்கு இருக்கின்ற ஆலைகள் எல்லாம் மூடி கட்டிடங்களாக மாற்றி வேலை வாய்ப்பு என்பதே ஒரு கேள்விக்குறி என்ற நிலையை உருவாக்கி உள்ளனர். மோடி ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஜிஎஸ்டி என்ற ஒன்று வந்த பிறகுதான் அனைத்து தொழிற்சாலைகளும் முடங்கி உள்ளது. சிறுகுறு தொழில்கள் அதிகமாக உள்ள கோவை மாவட்டத்தில் 300 சதவிகிதம் மின் கட்டணம் உயர்த்திய மத்திய மாநில அரசுகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கோவையை மீண்டும் தொழில் நகரமாக்க சிங்கை ராமச்சந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும். மத்தியில் ஆளும் கட்சியும், தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும் மக்களுக்கு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. எவ்வித திட்டங்களையும் செய்யவில்லை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரிய சீர்கேடாகவும், கஞ்சா பழக்கம் அதிகமாகவும், அதுமட்டுமில்லாமல் எந்த பகுதியில் பார்த்தாலும் டாஸ்மாக் கடைகளின் தலைவிரித்து ஆடுவதும், படித்த படிக்காத இளைஞர்களுக்கு யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லாத ஒரு நிலையையும் இருப்பதால் இன்னைக்கு தமிழ்நாடே தலைகுனிவாக இருக்கின்ற ஒரு நிலையை நாம் பார்க்க முடிகிறது” என்று பிரேமலதா வேதனை தெரிவித்தார்.