வானிலை ஆய்வு மையத்தின் தகவல்!

Filed under: தமிழகம் |

வானிலை ஆய்வு மையம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (06.01.2024) தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், கோயம்பத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிககள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (07.01.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்” எனவும் கூறப்பட்டுள்ளது. 7ம் தேதி தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் மேல் குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தி உள்ளது.