பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில் “தந்தை – மகன் – பேரன் – கொள்ளுப்பேரன் என அதிகாரத்தை கை மாற்றுவதுதான் வாரிசு அரசியல். கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக, முதலமைச்சராக துரைமுருகன் போன்றவர்கள் வந்து, அந்த அமைச்சரவையில் ஸ்டாலின் ஓர் அமைச்சராக இருந்தால் அது வாரிசு அரசியல் அல்ல. ஆனால், இப்போது அப்படியா நடக்கிறது. உதயநிதியின் பேரனையும் ஏற்போம் என மூத்த அமைச்சர்களே பேசும் நிலைதானே இருக்கிறது. இதனால், கட்சிக்காக உழைத்த, தகுதியும், திறமையும் கொண்ட மற்றவர்கள் யாரும் தலைமைக்கு வர முடிவதில்லை. ஒரு பதவிக்கு குறிப்பாக தலைமை பதவிக்கு இந்த குடும்பத்தில் பிறந்தால் தான் வர முடியும் என்பது, மற்றவர்களுக்கு போடப்படும் தடை. ஒரு இடத்தில் நுழையாமல் இருக்க வேலி அமைப்பது போன்றது. 144 தடை உத்தரவு போன்றது. இது பாசிசம் தானே. மக்களாட்சி நடக்கும் நாட்டில் இதை கேள்வி கேட்காமல் எப்படி இருக்க முடியும்? ஜனநாயகம், சமத்துவம், சம நீதி, சமூக நீதி என பேசிக் கொண்ட அதற்கு நேர் எதிராக செயல்படுவதுதான் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட வாரிசு தலைமை கட்சிகளின் வழக்கமாக உள்ளது. இதைதான் பாஜக மக்களிடம் அம்பலப்படுத்துகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.