காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வினேஷ் போகத்தின் பதக்க கனவு தகர்ந்ததால் பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “உலக சாம்பியன் மல்யுத்த வீரர்களை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பெருமைக்குரிய வினேஷ் போகத், தொழில்நுட்ப காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. வினேஷ் மனம் தளரக்கூடியவர் அல்ல, அவர் இன்னும் வலுவாக களம் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நீங்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் வினேஷ். இன்றும் உங்கள் பலமாக முழு நாடும் உங்களுடன் நிற்கிறது” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.