வாஷிங்டன், செப் 23:
அமெரிக்காவுக்கு விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி, நேரத்தை வீணடிக்காமல், அரசு கோப்புகளை படித்துப் பார்த்து கையெழுத்திடும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின்பேரில், நம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, தலைநகர் டெல்லியில் இருந்து விவிஐபிக்களுக்கான ஏர் இந்தியா ஒன் விமானம் மூலம், நேற்று காலை புறப்பட்டார்.
விமானத்தில் பயணித்த பிரதமர், நேரத்தை வீணடிக்காமல், அரசு கோப்புகளை படித்துப் பார்த்து கையெழுத்திடும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். டுவிட்டரில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ள அந்த புகைப்படம், சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரதமரின் கடமை உணர்ச்சியை கண்டு, நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
நீண்ட பயணத்திற்குப் பின், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு இன்று அதிகாலை பிரதமர் மோடி சென்றடைந்தார். அவர் விமானத்தில் இருந்து இறங்கும்போது மழை பெய்ததால், தானே குடையை பிடித்தவாறு, விமானத்தில் இருந்து இறங்கினார்.
விமான நிலையத்தில், அவரை அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளி மக்கள், பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.