பெண் ஒருவர் டுவிட்டரில், பெங்களூரு விமான நிலையத்தில் மேலாடையை விமான நிலைய அதிகாரிகள் கழற்ற சொன்னதாக பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபமாக கொரோனா காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு சோதனைகளும் நடத்தப்படுகின்றன. பெங்களூரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் பல வந்து செல்கின்றன. சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டிருந்த கிரிஷானி காத்வி என்ற பெண் “பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் என்னுடையை மேலாடையை கழற்றும்படி சொன்னார்கள். ஒரு உள்ளாடையை மட்டும் அணிந்து கொண்டு சோதனை பகுதியில் நின்றது உண்மையில் வேதனைக்குள்ளாக்கியது. ஒரு பெண்ணை ஏன் நீங்கள் ஆடையை கழற்ற செய்ய வேண்டும்?” என்று பதிவிட்டுள்ளார். இந்த டுவீட் வைரலான நிலையில் பெங்களூரு விமான நிலையம் சார்பில் பெண்ணிடம் மன்னிப்பு கேட்கப்பட்டதுடன், இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும், பாதுகாப்பு குழுவினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருடைய அலைபேசி எண், விவரங்கள் கேட்கப்பட்ட நிலையில் சில நிமிடங்களுக்கு பின் அவரது டுவிட் டெலிட் செய்யப்பட்டுள்ளது. அவர் எதனால் அதை டெலிட் செய்தார் என்பது குறித்து தெரியவில்லை.