வெங்கடாசல நாயகருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-
தமிழ்நாட்டில் தந்தை பெரியாருக்கும், அயோத்திதாச பண்டிதருக்கும் முன்பாகவே மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடிய அத்திப்பாக்கம் அ.வெங்கடாசல நாயகரின் 123-ஆவது நினைவு நாள் நவம்பர் 3-ஆம் நாளான நாளை கடைபிடிக்கப்படுகிறது. எளிய மக்களின் நிலவுரிமைக்காக வலியவர்களை எதிர்த்துப் போராடிய ஈடு இணையற்ற போராளியின் நினைவை இந்த நாளில் நாம் போற்றுவோம்.
செங்கல்பட்டு மாவட்டம் அத்திப்பாக்கம் கிராமத்தில் 1799-ஆம் ஆண்டில் பிறந்த அ.வெங்கடாசல நாயகர், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்று சென்னையில் ஆசிரியராக பணியாற்றினார். மூளக்கொத்தளம் சுண்ணாம்புக் காளவாயில் வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டினார். ஈட்டிய பொருளைக் கொண்டு ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைக்காமல், ஆங்கிலேயர்களின் அரைகுறை புரிதலால் வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட பெருந்துரோகம் மற்றும் வாழ்வாதாரப் பறிப்பை எதிர்த்து, இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கும், மகாராணிக்கும் எட்டும் வகையில் 30 ஆண்டுகள் தொடர் போராட்டம் நடத்தி வன்னியர்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடியதால் தான் வரலாற்று நாயகர் ஆனார்.
19-ஆவது நூற்றாண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த நிலங்களுக்கு உரிமை வழங்க நினைத்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் எல்லீஸ், அது குறித்து அரசுக்கு பரிந்துரை அறிக்கை வழங்குவதற்காக பொம்ம கொண்ட சாஸ்திரி என்கிற சங்கரய்யா என்பவரை நியமித்தார். ஆனால், வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்யாத சங்கரய்யா, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் அவற்றை விவசாயம் செய்து வரும் பாயக்காரி எனப்படும் வன்னியர்களுக்கு சொந்தமானவை அல்ல; அவை மிராசுகளுக்கு சொந்தமானவை என்று அறிக்கை அளித்தார். அதனடிப்படையில், பெரும்பான்மையான நிலங்களை வன்னியர்களிடமிருந்து பறித்து பிற சமுதாய மிராசுகளுக்கு ஆங்கிலேயர் அரசு வழங்கியது.
இது மிகப்பெரிய அநீதி என்பதை அறிந்த வெங்கடாசல நாயகர், வன்னியர்களின் நில உரிமையை மீட்டெடுப்பதற்கான பெரும் போராட்டத்தை 1860-ஆம் ஆண்டில் தொடங்கினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண் நிலங்களை சீரமைத்து பயிர் செய்து வருபவர்கள் வன்னியர்கள் தான். மாவட்டத்தில் மொத்தமுள்ள நிலங்களில் ஏழில் 4 பங்கு வன்னியர்களின் மன்னவேடு ஊர்களாக இருந்தன. ஆனால், அதில் 87.50 விழுக்காடு நிலங்களை மிராசுதார்கள் பிடுங்கிக் கொண்டனர் என குற்றஞ்சாட்டிய வெங்கடாசல நாயகர், மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வன்னிய மக்களை சந்தித்து, ஆதாரங்களைத் திரட்டினார். அவற்றை ஆங்கில ஊடகங்களில் வெளியிடச் செய்ததுடன், சென்னை, கொல்கத்தா, லண்டன் ஆகிய இடங்களில் உள்ள அதிகாரிகளுக்கும் தெரிவித்தார். இவற்றை தமிழ், ஆங்கில ஆகிய மொழிகளில் நூலாக தொகுத்த நாயகர், இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கும், அரசிக்கும் தெரியப்படுத்தினார். 30 ஆண்டுகளுக்கும் மேல் இவர் நடத்திய தொடர் போராட்டங்களின் பயனாக நிலப்பறிப்பு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தனிக் குழுவை இங்கிலாந்து அரசி அனுப்பி வைத்தார். அதனால், அவரை செங்கல்பட்டு மாவட்ட வன்னியர்களின் முகவர் என பிரிட்டிஷ் அரசு அங்கீகரித்தது.
அத்திப்பாக்கம் அ. வெங்கடாசல நாயகரின் பெருமைகள் இத்துடன் நிறைவடைந்துவிடவில்லை. வீணான மூட நம்பிக்கைகளுக்கும், சடங்குகளுக்கும் ஏழைகள் அதிகம் செலவு செய்வது கடனாளி ஆவதைக் கண்டு கவலைப்பட்ட அவர், அவற்றுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். மூட நம்பிக்கைக்கு எதிராக மிகப் பெரிய சமூக சீர்திருத்த நூலை எழுதி 1882-ஆம் ஆண்டில் வெளியிட்டார். அனைவரும் தங்களின் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்திய வெங்கடாசல நாயகர், இந்தியர்கள் அனைவருக்கும் கல்வி கற்பிக்கும்படி இங்கிலாந்து அரசியாருக்கு மனு மூலம் கோரிக்கை விடுத்தார். ஆங்கிலேய அரசின் சட்ட நிரூபன சபையில் இடம் பெறாத சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என 1868-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேய அரசிடம் முறையிட்ட பெருமை இவருக்கு உண்டு.
இத்தகைய பெருமைகளைக் கொண்ட அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் 1897 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் நாள் தனது 98 ஆவது வயதில் சென்னை ஏழுகிணறு கிரிகோரி தெருவிலுள்ள தமது இல்லத்தில் இயற்கை எய்தினார். பிராமணர் அல்லாதோர் உரிமைகளுக்காக தந்தை பெரியாரும், அவருக்கு முன் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காக அயோத்திதாச பண்டிதரும் போராடியதற்கு பல ஆண்டுகள் முன்பாகவே வன்னியர்களின் நிலவுரிமைப் போராட்டத்தை நடத்திய பெருமை அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகருக்கு உண்டு. அத்துடன் அனைத்து சமுதாயத்தினரின் கல்விக்காகவும், சமூக சீர்திருத்தத்திற்காகவும் உழைத்த அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகரின் சிறப்புகளும், பெருமைகளும் அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும்; அவரது தியாகம் போற்றப்பட வேண்டும்.
அதற்காக, அவரது தியாக வரலாறு தமிழக பாடத்திட்ட பாடநூல்களில் பாடமாக சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகரின் நினைவு நாளை அரசு நிகழ்வாக கடைபிடிக்க வேண்டும். அவருக்கு மணி மண்டபமும், திருவுருவச் சிலையும் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்