மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை தேரோட்டம் என்பதால் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு வழங்க ஆய்வு செய்து வருகின்றனர்.
மிகவும் பிரசித்திப் பெற்றது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில். இக்கோயிலில் நாளை தேர்த் திருவிழா நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தேர் செல்லும் பாதைகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் மாரிமுத்து, செல்வராஜ் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறுகையில், “தஞ்சாவூர் கோயில் திருவிழாவில் விபத்து ஏற்பட்டதால், எந்தவிதமான சிறு அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஸ்ரீரங்கத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை நேரில் பார்வையிட்டுள்ளோம்.’’ என்றார்.
கொரோனா 4வது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது அலை போல்தான் இருக்கும். ஆனால், பரவல் விகிதம் அதிகமாக இருக்கும். மக்கள் விழிப்புடன் பங்கேற்க வேண்டும். அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், கடந்த ஆண்டை விட கூடுதலாக 400 போலீசார் என ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மக்கள் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்ய கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.