11 லட்சம் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்!

Filed under: தமிழகம் |

ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக ரூ.11.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விழாக்காலம் என்பதால் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுதொடர்பாக நேரடி ஆய்வு மேற்கொள்ளுமாறு ஆர்டிஓ தலைமையிலான குழுவினருக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டார்.

இருப்பினும் ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் 3 மடங்காக உயர்த்தின. வழக்கமான நாட்களில் சென்னையிலிருந்து திருச்சிக்கு ஆம்னி பஸ்களில் ரூ.800 வரை தான் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால், ரூ.2300 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதே போல சென்னையிலிருந்து கோவைக்கு ரூ.1000 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் நேற்று ரூ.3000 ஆக அதிகரித்தது. இதே போல சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலிக்கு சுமார் ரூ.1400 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணம் ரூ.3500 வரை உயர்ந்தது. மேலும் ஓசூரிலிருந்து கோவில்பட்டிக்கு ரூ.4000 கட்டணம் வசூலிக்கப்பட்டது என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.11.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்தார். தொடர் விடுமுறையின் போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீபாவளி, பொங்கல் விழாவின் போது கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.