பிரிட்டன் நாட்டின் செயற்கை கோள்களை ஏந்தி பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட் நாளை இரவு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதற்கான 62 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று காலை 7.28 மணிக்கு தொடங்கியது. 5 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வணிக ரீதியில் செயற்கை கோள்களை அனுப்பி வருகிறது. அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை வணிக ரீதியில் விண்ணில் செலுத்துவது இதுவே முதல் முறையாகும்.
பி.எஸ்.எல்.வி சி – 28 ராக்கெட்டின் 30-வது பயணத்தில் பிரிட்டனின் டி.எம்.சி. 3 என்ற மூன்று செயற்கை கோள்களும், சி.பி.என்.டி -1 மற்றும் டி-ஆர்பிட் செயில் ஆகிய செயற்கை கோள்கள் ஏவப்படுகின்றன. டி.எம்.சி. 3 செயற்கை கோள்களும், சி.பி.என்.டி – 1 செயற்கை கோளும் சர்ரே சாடிலைட் டெக்னாலஜி என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. மற்றொரு செயற்கைகோள் சர்ரே ஸ்பேஸ் சென்டர் அமைப்பால் உருவாக்கப்பட்டது. டி.எம்.சி. 3 செயற்கை கோள்கள் தலா 447 கிலோவும், சி.பி.என்.டி-1 செயற்கை கோள் 9 கிலோவும், டி ஆர்பிட் செயில் 7 கிலோவும் எடை கொண்டது.
விண்ணில் பாயும் போது பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் மொத்த எடை 1,440 கிலோவாக இருக்கும். நான்கு நிலைகள் கொண்ட பி.எஸ்.எல்.வி. 44.4 மீட்டர் உயரம் கொண்டதாகும். விண்ணில் ஏவப்பட்டு ஒரு நிமிடம் 50 வினாடி யில் முதல் மற்றும் இரண்டாம் நிலைகள் பிரிந்து செல்லும். மூன்றாவது நிலை 8 நிமிடம் 37 நொடியில் பிரியும். நான்காவது நிலை 17 நிமிடம் 19 நொடியில் பிரியும். அதன் பிறகு டி.எம்.சி 3 ன் 1, 2 செயற்கை கோள்கள் 17 நிமிடம் 56 நொடியிலும், 3-வது செயற்கைகோள் 17 நிமிடம் 57 நொடியிலும் பிரியும். அதன் பிறகு டி-ஆர்பிட் செயில் 18 நிமிடம் 36 நொடியிலும், சி.பி.என்.டி -1 செயற்கைகோள் 19 நிமிடம் 16 நொடியிலும் பிரிந்து விண்ணில் செல்லும். கடைசி செயற்கைகோள் பிரியும் போது, அது 654.75 கி.மீ தூரத்தில் சென்று கொண்டிருக்கும்.
இந்த செயற்கை கோள்கள் பூமியின் மேல்தளத்தை தினமும் படம் பிடித்து காட்டும். பூமியின் மண் வளம் உள்ளிட்ட பிற ஆதாரங்கள், நகர்ப்புற உள் கட்டமைப்பு, பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு உதவும்.
டி.எம்.சி இண்டர்நேஷ்னல் இமேஜிங் என்ற நிறுவனத் துடன், இஸ்ரோவின் வணிக பிரிவான ஆண்டிரிக்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. 1999-ம் ஆண்டு முதல் இதுவரை ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர், ஜப்பான், நெதர்லாந்து, கொரியா, பெல்ஜியம் உள்ளிட்ட 21 நாடுகளின் 40 செயற்கை கோள்கள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளன.
நம்பகமான ராக்கெட்
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உலகிலேயே மிக நம்பகமான ராக்கெட் என்று இஸ்ரோ கூறுகிறது. பி.எஸ்.எல்.வி. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்கை கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவி வருகிறது. சந்திரயான் -1, மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் உள்ளிட்ட பல வெற்றிகளை கண்டுள்ளது. 2008-ம் ஆண்டு 10 செயற்கை கோள்களை ஏந்தி சென்ற பி.எஸ்.எல்.வி. அனைத்தையும் சரியான வட்ட பாதையில் பொருத்தி சாதனை படைத்துள்ளது.