டெல்லி: சீனா வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இந்திய-நேபாள எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது.பாகிஸ்தானில் இருந்து ரூ.37 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் சீனா வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பணம் டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டது. இது நடந்த சில நாட்களில் ரூ.30 லட்சம் கள்ளநோட்டுகள் இந்திய-நேபாள எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சீனா வழியாக இந்தியாவுக்கு கள்ளநோட்டு வந்துள்ளது இது தான் முதல் முறை.
சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் அதிகாரமிக்க போதைப் பொருள் வியாபாரிகள், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ ஆகியோரின் உதவியுடன் இந்தியாவுக்கு கள்ளநோட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்திய உளவுத்துறை அளித்த தகவலின்பேரில் அதிகாரிகள் கடந்த 24ம் தேதி இந்திய-நேபாள எல்லையில் உள்ள பிர்கஞ்சைச் சேர்ந்த ரஞ்ஜித் என்பவரை கைது செய்தனர்.
ரூ.30 லட்சம் கள்ளநோட்டை அவர் வாங்கும்போது தான் சிக்கினார். கள்ளநோட்டுகள் ஹாங்காங்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொம்மைகள், பியானோ மற்றும் தொட்டில்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட இந்த கள்ளநோட்டுகள் நேபாளம் வழியாக பீகாரில் உள்ள மோதிஹரிக்கு அனுப்பி வைக்கப்பட இருந்தது.
இந்த கள்ளநோட்டு விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் ஏற்கனவே விசாரணையை துவங்கிவிட்டது.