நாளை நாசா விண்வெளி ஆய்வு மையம் பூமி அருகே வரும் விண்கல் ஒன்றின் மீது நாசாவின் விண்கலம் மோதும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப உள்ளது.
விண்வெளி ஆய்வில் உலகின் பல நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் அவற்றில் முன்னணியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இருந்து வருகிறது. சமீபத்தில் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு செய்து வரும் நாசா மற்றொரு பக்கம் விண்கற்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது. விண்வெளியில் பயணிக்கும் பல விண்கற்கள் பூமியை நோக்கிய பாதையில் பயணிப்பதும், இதனால் அவ்வபோது பூமிக்கு அபாயம் விண்கற்களால் நேருமா என்பது குறித்தும் ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர். அடுத்த சில ஆண்டுகளுக்கு பூமிக்கு விண்கற்களால் ஆபத்து இல்லை. எதிர்காலத்தில் அப்படியான நிலை ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாசா இறங்கியுள்ளது. அதற்கான புதிய திட்டம்தான் DART Mission (Double Asteroid Redirection Test). அதன்படி நாசா தயாரித்துள்ள டார்ட் விண்கலம் ‘Dimorphos’ என்னும் விண்கல் ஒன்றின் மீது மோதி தாக்க உள்ளது. அந்த விண்கல் பயணிக்கும் பாதையை விண்கலம் கொண்டு தாக்கி மாற்றுவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். அப்படி விண்கற்களை விண்கலம் கொண்டு தாக்கி அதன் பாதையை மாற்ற முடிந்தால் எதிர்காலத்தில் பூமியை நோக்கி வரும் விண்கற்களின் பாதையை திசை திருப்ப இது உதவியாக இருக்கும்.
சோதனை முயற்சியான இந்த டார்ட் மிஷன் அமெரிக்க நேரப்படி செப்டம்பர் 26ம் தேதி இரவு 7.14 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நாளை (செப்.27) அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதல் திட்டம் நடைபெறும். இந்த விண்கல் தாக்குதலை நாசா நேரடியாக ஒளிபரப்ப உள்ளதால் இதுகுறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நேரடி ஒளிபரப்பை நாசாவின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.