தமிழக டிஜிபி புதியதாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தமிழ்நாட்டில் போக்சோ வழக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சிறுவர், சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர் பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புதிய அறிவுறைகளை வழங்கியுள்ளார். அதன்படி, திருமண உறவு மற்றும் காதல் உறவுகளில் தொடரப்படும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல், அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிர் மனுதாரரை விசாரணை செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுபோல குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படவில்லை என்றால் அதற்கான தகுந்த காரணத்தையும் வழக்கு கோப்பில் குறிப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிலை அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும் என்றும், மேல்நடவடிக்கையை கைவிடும் வழக்குகளில் கோப்பினை தீவிரமாக ஆராய்ந்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.