முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு உரிமைத் தொகை கிடையாதா? என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் அமலாக்கம் செய்ய உள்ள நிலையில் யாருக்கெல்லாம் இத்திட்டத்தில் நிதியுதவி கிடைக்கும் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கான விளக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். திமுக அரசு அமைந்தது முதலாக தமிழ்நாட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திட்டம் மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, “குடும்பத் தலைவிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 மாதம்தோறும் செலுத்தப்படும். மீனவப் பெண்கள், சாலையோர கடை வைத்திருக்கும் பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்கும். கட்டுமான பணிகளில் ஈடுபடும் பெண்கள், சிறுகடைகள், சிறுதொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்கும். ஒரு நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பணி செய்யும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். மொத்தமாக ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 மாதம் வழங்கப்பட உள்ளது” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு வகைகளில் விலை மதிப்பில்லாத உழைப்பை வழங்கும் பெண்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் எந்த கூலி வேலைக்கும், பணிக்கும் செல்லாமல் வீடுகளில் உள்ள பெண்களுக்கு உரிமைத்தொகை குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.