ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர் மீதான வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஜூலை 15-ல் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. பின்னர் கருணை அடிப்படையில், நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற மூன்று பேரின் கருணை மனுக்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டன.
கருணை மனுவை நீண்டகாலம் கிடப்பில் வைத்திருந்ததை காரணம் காட்டி விடுதலை செய்ய இதுவே போதுமான காரணம் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில், மூன்று பேரின் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவு மாநில அரசிடம் விடப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் விடுவித்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிபிஐ விசாரணை நடத்திய வழக்கில் மாநில அரசு தன்னிச்சையாக குற்றவாளிகளை விடுவிக்க முடியாது என்று கூறி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா அடங்கிய அமர்வு கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது. தண்டனை குறைப்பு அதிகாரம் அரசியல் சட்டப் பிரிவு 72-ன் படி குடியரசுத் தலைவர், 161-ன் படி ஆளுநர், 32-ன் படி நீதிமன்றம் ஆகிய மூன்றுக்கும் உள்ளது. இதில் ஓர் அதிகாரத்தை பயன்படுத்திய பிறகு, மீண்டும் இன்னொரு அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா? ஒரு வழக்கின் மீது இரண்டு அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா? இந்த அதிகாரத்தை மத்திய அரசு, மாநில அரசு என இரண்டு அரசுகளும் பயன்படுத்த நினைக்கும்போது யாருடைய அதிகாரம் செல்லும்?
மாநில அரசு தன்னிச்சையாக தண்டனை குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா? இந்த சட்டப்பூர்வ கேள்விகளுக்கு விடை தெரியவேண்டியது நாட்டுக்கே அவசியம். இதை அரசியல் சாசன அமர்வு ஆராயும். இந்த வழக்கு முடியும்வரை, முன்பு பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் தொடரும் என்று உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பால், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தள்ளிப்போனது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏழு பேரையும் விடுதலை செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு விசாரணை அமைப்பாக உள்ள ஒரு வழக்கில் மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து விடுதலை செய்ய முடியாது என்று வாதிடப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு வரும் ஜூலை 15-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.