காவல் நிலையத்தில் நபர் ஒருவர் கேரளாவில் கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடித்த சம்பவத்தில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் எர்ணாக்குளத்தில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் ஒன்றில் 3 டிபன் பாக்ஸ் வெடிக்குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேரும், படுகாயங்களுடன் 20க்கும் மேற்பட்டோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரள மாநிலம் முழுவதும் தேவாலயங்கள், பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் திரிச்சூர் காவல் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் குண்டு வைத்தது நான் தான் என கூறி சரணடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சரணடைந்தவர் பெயர் டோமினிக் மார்ட்டின் எனவும், அவர் குண்டு வெடிப்பு நடந்த ஜெஹோவா விட்னஸ் சபையின் உறுப்பினராக இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அம்மாநில சட்ட ஒழுங்கு ஏடிஜிபி தெரிவித்துள்ளார். அவர் குண்டு வைத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணையில் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.