மதுரை திருமங்கலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டு சந்தையில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தென் மாவட்ட அளவில் புகழ் பெற்ற இந்த ஆட்டுச்சந்தையில் தீபாவளி, பொங்கல் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனைக்கு வரும். பண்டிகை நாட்களில் இந்த சந்தையில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையாகும். வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் ஆட்டுச்சந்தை பொங்கல் ஸ்பெஷல் சந்தையாக இன்று நடந்தது. ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. தமிழகம் தவிர ஆந்திரா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். திருமங்கலம், மதுரை, விருதுநகர், சிவகாசி, தென்காசி, நெல்லை, தேனி, கம்பம், திருச்சி, சிவகங்கை, காரைக்குடி, வாடிப்பட்டி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் ஆடுகளை வாங்க குவிந்தனர். இன்று அதிகாலை காலை 4 மணி முதலே ஆட்டுச்சந்தை விற்பனை களைகட்டியது. 10 ஆயிரம் ஆடுகள் முதல் 20 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனை செய்யப்பட்டன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விலையும் அதிகமாக இருந்தது. சாதாரண நாட்களில் இந்த சந்தையில் ஆடு ஒன்றின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரம் வரை இருக்கும். ஆனால், இன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.