சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 4 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். சீமான் வேண்டுகோள்.
திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெயில் கார்னர் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் வக்கீல் பிரபு தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் பிரபு தனபால் முன்னிலை வகித்தார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
அப்போது அவர் பேசும் போது, சிறப்பு முகாம் எனும் பெயரில் ஈழச்சொந்தங்களை அடைத்துவைத்துள்ள சித்திரவதைக் கூடங்களை உடனடியாக இழுத்து மூட வேண்டும், ராஜூவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெக்குமார் ஆகியோரை விடுவிக்க வேண்டும், தமிழர்களை இவர்கள் ஆளவேண்டும் என்ற கனவு தான் இருக்கிறது. தமிழ் இனம் வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்காது, விடுதலை புலிகள் அழிந்து விட்ட நிலையில் அந்த இயக்கத்திற்கு தடை விதித்துள்ளது. இல்லாத இயக்கத்திற்கு தடை விதித்தது ஒரு தேசிய இனத்தின் மீது சுமத்தப்படுகிற அவமானம் ஆகும்.
தமிழக அரசிடம் கேட்டுகொள்வது ஒன்று தான் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இந்த 4 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால், நாம் இழந்து விட்ட உரிமைகளை போராடி பெற வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விவசாய சின்னத்திற்கு வாக்கு அளித்து நாம் தமிழர் கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும், அதிகாரம் நம் கையில் இருந்தால்தான் நமது உரிமைகளை மீட்க முடியும் என்று பேசினார் சீமான்.
ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை இந்திய அரசியல் கட்சிகளிலேயே முதன்மையாக செயற்கை நுண்ணறிவு செட் போர்ட் மூலம் உறுப்பினர்களை இணைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியது. . அதன் தொடர்ச்சியாக அழைப்பின் மூலம் உறுப்பினர்களை இணைக்கும் ரிங் அன் ஜாயின் என்ற திட்டம் திருச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.