ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிலைகள், கொடிமரங்கள் திருட்டு – பக்தர்கள் அதிர்ச்சி.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டாளை தரிசித்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலின் நிர்வாக அதிகாரி முத்துராஜா மதுரையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் உள்பிரகாரத்தில் கல்யாண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் நுழைவுவாசலில் 2 யானை சிலைகள் இருந்தன. அழகான இந்த கற்சிலைகளை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து காணவில்லை. மேலும் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது புதிய கொடி மரங்கள் அமைக்கப்பட்டன.
ஆண்டாள் கோவிலில் உள்ள 3 கொடி மரங்களும் புதிதாக அமைக்கப்பட்டு, பழைய கொடிமரங்கள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தன. இதில் ஒரு கொடிமரம் மட்டுமே உள்ளது. மற்ற 2 கொடி மரங்கள் மாயமாகி உள்ளன. எனவே யானை கற்சிலைகள் மற்றும் கொடி மரங்களை கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகளை கண்டுபிடித்து தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அண்மையில் காணாமல் போன 2 கொடி மரங்கள் குறித்து விசாரித்தபோது கோயில் வெள்ளை அடிப்பு பணிக்காக ரமேஷ் என்ற நபர் மற்றும் அவரது சகோதரர் மாரிமுத்து ஆகிய இருவரும் லாரி மூலம் கொடி மரங்களை வெளியே எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.