தீவிர அரசியலிலிருந்து பாஜக எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கிழக்கு டில்லியில் எம்பியாக இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு பாஜகவில் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றார். மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2024ம் ஆண்டு தேர்தலில் அவருக்கு சீட் வழங்குவது சந்தேகம் என பாஜக வட்டாரங்கள் கூறி வருகிறது. திடீரென அரசியலிலிருந்து விலகும் முடிவை கவுதம் கம்பீர் எடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தும் வகையில், எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவிடம் கேட்டுக் கொண்டேன். மக்களுக்குச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனப்பூர்வமாக நன்றியை தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக கம்பீர் நியமிக்கப்பட்ட நிலையில் அந்த பணியில் கவனம் செலுத்த போவதாக கூறப்படுகிறது.