தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி பிரச்சாரத்திற்கு ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், மாலை 6 மணி வரை பரப்புரை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் 17ம் தேதி முடிவடைகிறது. மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை காலம் என்பதால் மேலும் ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வருகிற 17ம் தேதி மாலை ஆறு மணி வரை வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.