மேகமலைக்கு சுற்றுலா வந்த புதுச்சேரி கல்லூரி மாணவர் விபத்தில் பலி.
புதுச்சேரி காரமணி குப்பம் , பைன் கேர் ஸ்ட்ரீட்-ல் வசிக்கும் சாமிநாதன் என்பவரின் மகன் அரவிந்த் (21). இவர் காரைக்காலில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு அரசு வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கோடை விடுமுறைக்காக தன்னுடன் படிக்கும் நண்பர்களான சிதம்பரம், சீனிவாசன், சுகேஸ் ,முருகன், ஸ்ரீமன் சந்தோஷ்குமார் , சஞ்சய், வேதாத்திரி பாலா , ஜீவன்குமார், மாதேஸ்வரன், தக்ஷன் ஆகியோருடன் தேனி மாவட்டம் சின்னனூரை அடுத்துள்ள ஹைவேவிஸ் மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்காக, தேனி முல்லை நகரில் வசிக்கும் மற்றொரு அரவிந்தன் என்பவரின் வீட்டுக்கு வந்து அவர்களோடு நேற்று ஒரு கார், 3 இருசக்கர வாகனங்களில் மேகமலை சென்றனர்.
அப்போது மலைப்பாதையில் தேனி கரட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆஸ்டின் (37) என்பவர் ஓட்டி வந்த டிராக்டரில் சுற்றுலா வந்த மாணவர்களில் அரவிந்தனும், தர்சனும் இயற்கையை ரசித்தபடி வருவதற்காக லிப்ட் கேட்டு ஏறி உள்ளனர். உடன் வந்த நண்பர்கள் காரிலும் இருசக்கர வாகனத்திலும் மேகமலை சென்று விட்ட நிலையில் , ஹைவேவிஸ் கடந்து மணலாறு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் டிராக்டரில் பயணித்த அரவிந்தன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மேலும் உடன் வந்த நண்பர் தக்சன் சிறு காயங்களுடனும்,டிராக்டரை ஓட்டி வந்த ஆஸ்டின் பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர் . அங்கு மாணவர் அரவிந்தனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் படுகாயம் அடைந்த டிராக்டர் டிரைவர் ஆஸ்டின் முதலுதவி சிகிச்சைக்கு பின்பு மேல் சிகிச்சைக்காகவும், அரவிந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காகவும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து ஹைவேவிஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலாண்டி விசாரணை செய்து வருகிறார் . சுற்றுலா வந்த இடத்தில் சக மாணவர் ஒருவர் பலியானதில் உடன் வந்த மாணவர்களும் அவரது குடும்பத்தார்களும் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.