வாரிசே …! உயிர்…..! தன்னுயிரை துச்சமென நினைத்த மூதாட்டியின் நெகிழ்ச்சி சம்பவம்.
தேனி அருகே உள்ள ஆதிபட்டி கிராமத்தில் தேவியம்மாள் (64) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆடுகள் மேய்த்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை ஆதிபட்டி அருகே உள்ள மேம்பாலத்தின் கீழே செல்லும் ரயில் தண்டவாளம் அருகே விவசாயம் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்தார். அவருடன் அவரது 4 வயது பேரன் தேஜஸ் குமார் தனது பாட்டிக்கு துணையாக உடன் இருந்தார்.
அப்போது ரயில் தண்டவாளத்தில் போடியில் இருந்து மதுரை நோக்கி ரயில் எஞ்சின் மட்டும் வந்து கொண்டிருந்தது. இதனை கவனிக்காத சிறுவன் தண்டவாளம் அருகே நின்று இருக்கவே அவரை, காப்பாற்றுவதற்காக தனது பேரனை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டு ரயிலில் அடிபட்டு தூக்கி எறியப்பட்ட மூதாட்டி தேவியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்நிலையில் மூதாட்டி தனது வாரிசான பேரனை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டதால் சிறுவனின் காலில் மட்டும் ரயில் மோதிய சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார், பின்னர் அடிபட்ட சிறுவன் தேஜஸ் குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உயிரிழந்த தேவியம்மாள் உடலை கைப்பற்றி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த தேவியம்மாள் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது வாரிசான பேரனை காப்பாற்றுவதற்காக தனது உயிரை துச்சமன நினைத்த தேவியம்மாளின் செயல் தேனி மாவட்ட மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.