கடலூர் பகுதியை சேர்ந்த 300 பேரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து ரூ.4 கோடி மோசடி செய்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் செம்மண்டலம் வில்வராயநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி என்பவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் புகார் மனு அளித்தார். அதில் தன்னுடன் பள்ளியில் படித்த சித்திரைபேட்டையை சேர்ந்த ரெஜினா என்பவரை திருமண நிகழ்வு ஒன்றில் சந்தித்து பேசிய போது கும்பகோணத்தில் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் அவர் ஏஜெண்டராக உள்ளதாகவும் தெரிவித்து அந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 18 மாதத்திற்கு மாதம் ரூ.15 ஆயிரம் வீதம் நிறுவனம் வழங்கும். பிறகு அசல் பணத்தையும் திருப்பி கொடுத்து விடுவார்கள் என்றும், இந்த நிறுவனத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பல பேரிடம் பணம் வசூல் செய்து கட்டி உள்ளேன். இதன் மூலம் நிறைய பேர் லாபம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார். அவரது ஆசை வார்த்தையை நம்பி நான் கடந்த 2022ல் ரூ.2 லட்சத்தை அவரிடம் கொடுத்து அடுத்த மாதம் லாப தொகை என ரூ.30 ஆயிரம் பெற்றேன். இதனால் அவரை முழுமையாக நம்பிய நிலையில், ரெஜினா கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் எதிரே தனியார் நிதி நிறுவன அலுவலகம் அமைத்து சித்திரைப்பேட்டை, சாமியார்பேட்டை, தம்மனாம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, குமாரப்பேட்டை, மடவாப்பள்ளம், நஞ்சலிங்கம்பேட்டை, தேவனாம்பட்டினம், எஸ்.புதூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த சுமார் 300 பேரிடம் ரூ.4 கோடி பணத்தை பெற்று ரெஜினா உள்ளிட்ட 4 பேரும் தலைமறைவாகினர். இது தொடர்பான மனுவை பெற்ற காவல் கண்காணிப்பாளர் ராஜா ராம் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதற்கிடையில் ரெஜினா, சங்கீதா ஆகிய 2 பேரும் புதுச்சேரியில் உள்ள வங்கிக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்தததை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் 2 பேரையும் பிடித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, அவர்கள் சுமார் 300 பேரிடம் ரூ.4 கோடி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.