தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகா அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய வசதியாக தமிழ்நாட்டிற்கு காவிரியில் தினமும் ஒரு டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை, நல்ல மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருக்கும் நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது. கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்றும், அதனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர இயலாது என்றும் கர்நாடக துணை முதலமைச்சர் கூறுவது முழுக்க முழுக்க பொய் ஆகும். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் இன்று காலை நிலவரப்படி, 72.50 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு சுமார் 20,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளின் நீர்இருப்பு கடந்த 19 நாட்களில் 35 டி.எம்.சி அதிகரித்துள்ளது. மொத்தம் 114.57 டி.எம்.சி கொள்ளவுள்ள அணைகளில் மூன்றில் இரு பங்கு அளவுக்கு தண்ணீர் இருக்கும் நிலையில், அணைகளில் தண்ணீர் இல்லை என்று கூறுவதை எவரும் நம்ப மாட்டார்கள். உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி என இம்மாத இறுதிக்குள்ளாக 44 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும். இன்று வரை 23 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரு டி.எம்.சி தண்ணீரைக் கூட தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்கவில்லை. இவை அனைத்துக்கும் மேலாக, காவிரி நடுவர் மன்றம் ஆணையிட்டவாறு, அதன் தீர்ப்பை செயல்படுத்த காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் அனைத்தையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.