ஏலியன் குறித்த நம்பிக்கைகள் மற்றும் கதைகளை பற்றி அவ்வப்போது மக்களிடையே பேச்சுகள் இருந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் சேலத்தை சேர்ந்த நபர் ஒருபடி மேலே சென்று ஏலியனுக்கு கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.
விஞ்ஞானிகள் இப்பிரபஞ்சத்தில் பூமி போன்றே உயிரினங்கள் வாழக் கூடிய கிரகங்கள் வேறு பலவும் இருக்கலாம் என்பது நம்பிக்கை கொள்கின்றனர். அதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் சரித்திர காலம் தொட்டே வேறு கிரக ஜீவராசிகள் குறித்தும், அவை பூமிக்கு வருவது குறித்ததுமான கற்பனைகள் மக்களிடையே இருந்து வந்துள்ளது. இப்போது பல ஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன் படங்கள், காமிக்ஸ் புத்தகங்கள் என ஏலியன்கள் பற்றி தினமும் ஏதாவது ஒரு கதை வந்து கொண்டே இருக்கிறது. சமீபகாலமாக தமிழக மக்களிடையேயும் இந்த ஏலியன்கள் குறித்த கற்பனைகள் அதிகரித்து வருவதன் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது சேலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவ கைலாய ஆலயம் என்னும் ஏலியன் கோவில். இங்கு சிவ லிங்கம், முருகன் உள்ளிட்ட விக்ரஹங்களுடன் ஏலியனுக்கும் சிலை ஒன்று வைக்கப்பட்டு வழிபட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய அந்த கோவிலின் நிர்வாகி பக்கியா, “சிவபெருமானால் படைக்கப்பட்ட பிரபஞ்ச காவல் தெய்வம் ஏலியன், ஏலியன்கள் பூமிக்கு இனி அதிகமாக வர உள்ளது, ஏலியன்களால் பல நன்மைகள் நடக்க உள்ளது. ஆத்ம ரூபத்தில் வந்து தன்னிடம் பேசிய ஏலியன்களிடம் அனுமதி பெற்ற பிறகே ஏலியன்களுக்கான இந்த ஆலயத்தை நான் கட்டியுள்ளேன்” என்று கூறியுள்ளார். இச்சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.