நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியளித்துள்ளார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 290-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாயமானவர்களை தேடும் பணி இரவு பகல் என்று பாராமல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, மாநில முதலமைச்சர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என நாடு முழுவதும் உதவி கரம் நீட்டப்பட்டு வருகிறது. அதன்படி நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கேரள மாநிலத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சித் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சத்தை கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் விக்ரம் ரூ.20 லட்சத்தையும், நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ரூ.50 லட்சத்தையும் நிவாரண நிதியாக வழங்கியது.