இன்று முதல் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடக்கம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பள்ளி கல்வி முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வி படித்தே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு முதலமைச்சர் ரூ.1000 உதவித் தொகை வழங்கினார். பின்னர் பேசிய அவர், “தொடக்க விழாவுக்கு வரும் முன்பே மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்க நேற்றே உத்தரவிட்டேன். நாள்தோறும் ஏராளமான திட்டங்களை தீட்டினாலும் ஒரு சில திட்டங்கள்தான் நமது மனதுக்கு நெருக்கமாக இருக்கும். தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்க நான் தேர்ந்தெடுத்த இடம் கோவை மண்டலம். கோவை மக்கள் அன்பான, பாசமான, சேவை மனப்பான்மை கொண்டவர்கள். இந்தியாவில் தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலம் என்று கூறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ள திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் நோக்கத்தோடு தமிழ்ப் புதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கலை கல்லூரிகள், 4 ஆண்டு பொறியியல், 5 ஆண்டு மருத்துவ படிப்பு, 3 ஆண்டு சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு திட்டம் பொருந்தும். கோவை அரசு கல்லூரியில் மாணவிகளுக்கான விடுதி கட்டடம், கருத்தரங்க கூடம் கட்டித்தரப்படும் என்று உறுதியளிக்கிறேன். பள்ளிப் படிப்பை முடிக்கும் ஒரு மாணவர் கூட உயர்கல்வி படிக்காமல் திசைமாறி சென்றுவிடக் கூடாது. தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் முன்னேற திராவிட மாடல் அரசு துணை நிற்கும். தடைகளை கடந்து வினேஷ் போகத் போராடி வென்று பாராட்டுகளைப் பெற்றது போல், மாணவர்களும் போராடி வெல்ல வேண்டும்” என்று கூறினார்.