பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆனார். தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக பேசி வரும் கங்கனா, முன்னதாக டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்து பேசியுள்ளார். விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்த பெண் ஒருவர் கங்கனாவை அதற்காக அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்து கங்கனா ரனாவத் பேசியுள்ளார். “விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாம் மாநிலத்தை வங்கதேசம் போல் மாற்றி இருப்பார்கள். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் இந்த தேசம் அறியாதது. போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல், கொலை சம்பவங்கள் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிடப்பட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றிருக்காவிட்டால் அவர்கள் நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார்கள்” என்று பேசியுள்ளார். இது மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.