கோயம்புத்தூர், ஏப்ரல் – 22
வே. மாரீஸ்வரன்
மனிதர்களைக் கொல்லும் கொடிய தொற்று நோயான கொரோனா அபாயகரமான நோய் என்பதால் அந்த நோயை வெல்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பதால் உணவையே மருந்தாக்கி கொரோனா நோயாளிகளை மீட்டு வருகிறது தமிழக அரசு.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் இந்த நேரத்தில் கோவை இ. எஸ். ஐ. மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படும் முதல் மூன்று நாட்களுக்கு கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யோக உணவு வழங்கப்படுகிறது. நோயாளிகள் மட்டுமல்லாமல் தனிமைப் படுத்துதல் மையங்களில் இருப்பவர்கள் கொரோனா நோயாளிகளை கையாளும் டாக்டர்கள், நர்ஸ் மருத்துவ பணியாளர்களுக்கும் இந்த மெனு தான். வீட்டில் இருப்பவர்களும் இந்த மெனுவை பின்பற்ற மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா நோயிலிருந்து தற்போது மீண்டவர்களும் மருத்துவமனையின் சிறப்பான கவனிப்பு, தரமான உணவு தான் தங்களை காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளனர். நோயாளிகளுக்கு எந்த வகையான உணவு தரப்படுகிறது என்பதை பார்ப்போம்,
முதல் நாள்
காலை உணவு : 8 – 30 மணி பொங்கல், இஞ்சி சட்னி, அத்துடன் ஆரஞ்சு, அவித்த முட்டை, மஞ்சள் மிளகு துருவிய ஒரு டம்ளர் பால். 10:30 – 11:30 மணி அளவில் அன்னாசி ஜூஸ், சர்க்கரை நோயாளிகளுக்கு இதற்கு பதில் சிட்ரஸ் பழங்களை அப்படியே சாப்பிட தருகிறார்கள்.
பகல் உணவு, தக்காளி சாதம், சர்க்கரைவள்ளி கிழங்கு குழம்பு, கீரை பொரியல், சீசன் காய்கறிகள், தயிர் சாதம்.
மாலை 4 மணி, தக்காளி சூப் மற்றும் முந்திரி பாதாம் வாதுமை பருப்பு, பேரிச்சை கலவை.
இரவு உணவு, காய்கறி குருமா அல்லது தக்காளி தொக்கு உடன் சப்பாத்தி, தூங்கும் முன் பனங்கற்கண்டு பால் மற்றும் மிகச்சிறிய அளவில் பூண்டு துண்டு.
இரண்டாவது நாள்:
காலை உணவு : இட்லி வடை சாம்பார் சட்னி, ஒரு ஆரஞ்சு, ஆம்லெட், மஞ்சள் மிளகு தூவிய ஒரு டம்ளர் பால். 10:30 – 11:30 மணி அளவில் தக்காளி ஜூஸ்.
மதிய உணவு, சாதம், கதம்ப சாம்பார், பூண்டு ரசம், கூட்டு, சீசன் காய்கறிகள், வாழை பழம், சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பழத்திற்கு பதிலாக கொய்யா, சிட்ரஸ் பழங்கள்
மாலை, கிரீன் டீ, வேகவைத்த சுண்டல்.
இரவு உணவு, தக்காளி வெங்காய சட்னியுடன் கோதுமை தோசை. தூங்குவதற்கு முன் பனங்கற்கண்டு பால், மற்றும் மிக சிறிய அளவில் பூண்டு துண்டு.
மூன்றாவது நாள்:
காலை உணவு : நிலக்கடலை சட்னியுடன் ஊத்தாப்பம், முட்டை பொரியல் ,ஒரு ஆரஞ்சு, மஞ்சள் மிளகு தூவிய ஒரு டம்ளர் பால். நெல்லிக்காய் ஜூஸ்.
மதிய உணவு, சாதம், பூண்டு குழம்பு, தக்காளி ரசம், கீரை பொரியல், சீசன் காய்கறிகள், வாழைப்பழம், சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பழத்திற்கு பதிலாக கொய்யா, சிட்ரஸ் பழங்கள்.
மாலை, இஞ்சி டீ ,பொட்டுக்கடலை உருண்டை ,சர்க்கரை நோயாளிகளுக்கு பொட்டுக்கடலையை அப்படியே கொடுக்க வேண்டும்.
இரவு உணவு, வெங்காயம் தக்காளி தொக்கு உடன் கோதுமை ரவை உப்புமா. தூங்கும் முன் பனங்கற்கண்டு பால், மிக சிறிய அளவில் பூண்டு துண்டு. சர்க்கரை நோயாளிகளுக்கு பனங்கற்கண்டு பேரீச்சை தவிர்க்கப்படுகிறது. நோயாளி இவ்வகை உணவுகளை சாப்பிட முடியாத அளவு மோசமான நிலையில் இருந்தால் மாற்று உணவு தரப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சரியான மருந்து கண்டுபிடிக்க முடியாத இந்த சூழ்நிலையில் தமிழக சுகாதாரத்துறை மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு உணவையே மருந்தாக்கி சாதனை படைத்து வருகிறார்கள். கோவை சிங்காநல்லூர் இ. எஸ். ஐ. மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் 53 பேர் நேற்று பூரண நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர்களை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாமணி நேரில் சென்று அவர்களை வாழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.