பி.எம் கேர் கணக்கு வழக்குகளை அறிவிக்க முடியாது! பிரதமர் அலுவலகம் திட்டவட்டம்!
பி எம் கேர் என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் வரவு செலவு கணக்குகளை பொதுவில் வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக The Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund என்ற நிதியமைப்பு கடந்த மார்ச் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக உள்ளனர். ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதி என்ற அமைப்பு இருக்கையில் புதிதாக் ஏன் மற்றொரு அறக்கட்டளை ஏன் எனக் கேள்விகள் எழுந்தன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிஎம் கேர் அமைப்புக்கு வந்துள்ள நிதி பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என பெங்களூருவைச் சேர்ந்த சட்ட மாணவராக இருக்கும் கந்துகுரி கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம்,’பி எம் கேர் பொது அமைப்பல்ல. அது தொடர்பான தகவல்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளது.
ஆனால் பிரதமரும், அமைச்சர்களும் பொறுப்பாளர்களாக இருக்கும், மக்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கும், ஒரு அமைப்பு பொது அமைப்புதான் எனவும், இதுகுறித்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும் ,கந்துகுரி தெரிவித்துள்ளார்.