65 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் பொது போக்குவரத்து – மக்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 65 நாட்களுக்குப் பிறகு இன்று பொதுப் போக்குவரத்து இயங்க ஆரம்பித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் 25 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதிலிருந்து மீண்டும் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் 65 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு உண்டானது. இந்நிலையில் இப்போது இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
இன்று காலை பேருந்துகள் இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் 60 சதவீத பயணிகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் எனவும், பயணிகள் முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் வரவேற்புக் கிடைத்துள்ளது.