திமுக- மார்க்சிஸ்ட் பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி: எண்ணிக்கை வேறுபாட்டால் முடிவு எட்டப்படவில்லை!
திமுக – மார்க்சிஸ்ட் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. தொகுதி எண்ணிக்கையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை கூட்டணிக் கட்சிகள் இடையே நடந்து வருகிறது. இதில் இழுபறி நீடித்த நிலையில் நேற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களில் போட்டியிட ஒப்புக்கொண்டது. தொடர்ந்து மதிமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ், சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.நேற்று மாலை பேட்டி அளித்த கே.பாலகிருஷ்ணன், நாங்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை விட கூடுதலாக இடங்களைக் கேட்டுப் பெறுவோம் எனத் தெரிவித்தார். இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தொடங்கியது. பேச்சுவார்த்தை தொடங்கிய 30 நிமிடங்களில் முடிந்தது.
”வெளியில் வந்த திமுகவுடன் பேச்சுவார்த்தைக் குழு சார்பாக இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினோம். திமுக அளிக்கும் தொகுதிகள் உடன்பாடு இல்லை என்பதால் நாங்கள் அளிக்கும் பட்டியல் குறித்துத் தெரிவித்தோம். எண்ணிக்கை முரண்பாடு உள்ளதால் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்தபின்னர் சொல்கிறோம் எனச் சொல்லிவிட்டோம். அவர்களும் மேலிடத்தில் பேசிவிட்டுச் சொல்வதாகத் தெரிவித்தர்” என்று கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
இன்று செயற்குழுக் கூட்டத்தை நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாளை மாநிலக் குழுக் கூட்டத்தைக் கூட்டுகிறது. மாநிலக் குழுவில் இதுகுறித்துப் பேசிய பின்னரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 இடங்களை எதிர்பார்க்கிறது, ஆனாலும், இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. திமுக 6 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. அதிலிருந்து ஏறி வரவேண்டும் என மார்க்சிஸ்ட் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால் நாளை மாலைக்கு மேல் அல்லது இரவுதான் முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.