கூவத்தூர் ரிசார்ட்டில்.. அகல் விளக்கு முன்னாடி “என்ன நடந்தது” சொல்லட்டா கருணாஸ் கடுகடு!
சென்னை: கூவத்தூரில், ஜெயலலிதா புகைப்படத்துக்கு முன்பாக, அதிமுக எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அகல் விளக்கில் சத்தியம் செய்வதாக முக்குலதோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் சேர்ந்தவர் கருணாஸ். சசிகலா சிறை சென்றபோது அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்களுடன் கூவத்தூர் ரிசார்ட்டில் இவரும் இருந்தார்.
சில காலம் எடப்பாடிக்கு எதிராக விமர்சனங்கள் செய்து வந்தார். சட்டசபையில் திமுகவுடன் சேர்ந்து அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
கருணாஸ் பேட்டி
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட பிறகு, அவரோடு நட்பு காட்ட ஆரம்பித்தார். இப்போது தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாகவும், அந்த கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்கப்போவதாகவும் அவர் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அகல் விளக்கு முன்பு சத்தியம்
தனது பேட்டியில் அவர் மேலும் கூறியதை பாருங்கள்: கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இருந்தபோது, நானும், தனியரசு எம்எல்ஏவும் கூட அங்கு இருந்தோம். அங்கே புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதாவை குறிப்பிடுகிறார்) உருவப் படத்தை வைத்து ஒரு அகல் விளக்கையும் வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே சத்தியம் செய்தனர்.
ஆசிர்வாதம்
அங்கு என்ன சத்தியம் செய்தார்கள் என்பது சசிகலாவுக்குத்தான் தெரியும். சசிகலா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது உண்மையா இல்லையா? யாராவது மறுக்க முடியுமா? நானும் தனியரசுவும் அங்கே இருந்தோம். நாங்கள் இருவர் மட்டும்தான் அதில் சத்தியம் செய்யவில்லை. நாங்கள் தனி அமைப்பை சேர்ந்தவர்கள். எனவே சத்தியம் செய்யவில்லை.
சசிகலா அறிமுகம்
அதிமுக அரசு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. கட்சியில் சசிகலாதான் என்னை அறிமுகப்படுத்தினார். அதனால்தான் என்னை ஓரம்கட்டிவிட்டார்கள். இவ்வாறு கருணாஸ் கூறியுள்ளார்.
கருணாஸ் அடுத்த திட்டம்
கடந்த முறை திருவாடானை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏ ஆன கருணாஸ். தற்போது திமுக கூட்டணியில் சேர்ந்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட ரெடியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.