புதுக்கோட்டையில் தொடரும் சாதி வெறி. உணவோடு சாலை மறியல்.

Filed under: தமிழகம் |

கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகாமையில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் புதுநகரைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றக் கிடா வெட்டி பூஜை நடத்தி உள்ளனர். அப்போது கிடா வெட்டு பூஜையில் கலந்து கொள்ளக் கிராமத்தில் உள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களையும் பூஜை நடத்திய சமூகத்தினர் அழைத்துள்ளனர்.

இந்நிலையில் மட்டங்கால் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அந்த பகுதிக்கு வந்த இரண்டு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களுக்கு முன்னதாகவே பட்டியலின இளைஞர்கள் உணவு உண்ண அமர்ந்து விட்டதாகக் கூறி பட்டியலின இளைஞர்களை அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்தின் பெயரைச் சொல்லித் தாக்கி உள்ளனர்.

இதனால், பட்டியலின இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கறம்பக்குடி – பட்டுக்கோட்டை சாலையில் கிடா வெட்டு பூஜையில் வழங்கப்பட்ட உணவோடு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் சுமார் மூன்றரை மணி நேரத்திற்கு மேலாகத் தொடர்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினரும், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது புகாரை எழுத்துப்பூர்வமாகக் காவல் நிலையத்தில் வழங்குங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நடவடிக்கை இல்லையென்றால் போராட்டம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்