வடமாநிலங்களை மிஞ்சும் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. ஐந்து பேர் கைது. இரண்டு பேர் தப்பி ஓட்டம்.

Filed under: தமிழகம் |

தேனியில் வடமாநிலங்களை மிஞ்சும் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. ஐந்து பேர் கைது. இரண்டு பேர் தப்பி ஓட்டம்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவரின் வீட்டில் ஒத்திக்கு சசிக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

வீட்டில் கழிவுநீர் செல்வதில் இரண்டு குடும்பத்திற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலமுருகனின் மனைவி ஜெயலட்சுமி, சசிகுமாரின் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலமுருகன் மனைவி ஜெயலட்சுமி சசிக்குமார் குடும்பத்தினரை மீண்டும் ஜாடை பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது சசிக்குமார் வீட்டிற்கு மஞ்சுனூத்து கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களான குமரேசன், அபிமன்யூ,விக்னேஷ்,மனோஜ், மதன் ஆகியோர் வந்தனர். தனது உறவினரான சசிக்குமார் குடும்பத்தினருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டதுடன், தாக்குதலும் நடத்திய ஜெயலட்சுமி, அவருடைய அண்ணன் வாசககுமார், மாமா மாலியன் ஆகியோரை அசிங்கமாக பேசியதுடன், மரக்கட்டை, மண்வெட்டி பிடி, மற்றும் கம்பியை கொண்டு சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.

மேலும் அவர்கள் மீது கற்களையும் வீசித் தாக்கினார். இந்த காட்சியை அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

அந்த காட்சியில் ஜெயலட்சுமி, வாசககுமார், மாலியன் ஆகியோரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வடமாநிலங்களை மிஞ்சும் அளவிற்கு ஒரு பெண்ணை மரக்கட்டையால் மாறி மாறி அடித்து, காலால் எட்டி உதைத்து,கற்களை வீசி தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் தான் கடமலைக்குண்டு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து ஜெயலட்சுமி கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெயலட்சுமி மற்றும் குடும்பத்தினரை தாக்கிய 8 பேர் மீது குற்ற எண் 190/2024 ல் 174, 148, 448, 294(b) 323, 324, 506(ii) ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மூன்று பேர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜெயலட்சுமி, வாசககுமார்,மாலியன் ஆகியோர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.