I.A.S., ரவி மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை: கர்நாடக பேரவையில் எதிர்க்கட்சிகள் உள்ளிருப்பு போராட்டம்

Filed under: இந்தியா |

karnataka_2344934f_2344970fஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி பெங்களூருவில் மர்மமான முறையில் இறந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி, கோரமங்களாவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மின்விசிறியில் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். மணல் கொள்ளை, ஊழலுக்கு எதிராக செயல்பட்டதால் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்துள்ளது. கொலை மிரட்டல்களும் வந்துள்ளன. எனவே, ரவி மர்மமான முறையில் இறந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) முழுதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவைக்குள்ளேயே தங்கினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணல் கடத்தல், ஊழலுக்கு எதிராக செயல்பட்டவர்:

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல்லை அடுத்துள்ள தொட்டகொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் டி.கே.ரவி (35). ஏழை விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.

கடந்த 2013-ம் கர்நாடகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான கோலார் மாவட்டத்துக்கு ஆட்சியராக நியமிக்கப்பட்டார். மணல் கடத்தல், சாலைப் பணிகளில் நடைபெறும் முறைகேடுகள், குவாரி முறைகேடு, ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு, புறம்போக்கு நில அபகரிப்புகள் உள்ளிட்ட சட்டவிரோத பிரச்சினைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். இதனால் இவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

கடந்த நவம்பர் 10-ம் தேதி டி.கே.ரவிக்கு பெங்களூருவில் வரி விதிப்பு அமலாக்கப் பிரிவில் கூடுதல் ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் பெங்களூருவில் கோடிக்கணக்கில் வரி மோசடிகளை செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார்.

திடீர் மரணம்

ரவி தனது மனைவி குசுமாவுடன் கோரமங்களாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு அலுவலகத்துக்கு சென்றவர், சக அதிகாரிகளுடன் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னர் 11 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.

மனைவி குசுமா மாலை 7 மணியளவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது மின்விசிறியில் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதையடுத்து குசுமாவும், அவரது தந்தை அனுமந்தரய்யப்பாவும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடல்கூறு ஆய்வுக்குப் பிறகு சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

கர்நாடகத்தில் போராட்டம்

ஐஏஎஸ் அதிகாரி மரணச் செய்தி பரவியதை அடுத்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. கோலார் மாவட்டத்தில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்டனர். கோலார் மாவட்டத்தில் பங்காருபேட்டை, மாலூர், முல்பாகல் ஆகிய இடங்களில் நடைபெற்ற சாலை மறியலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரவியின் திடீர் மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சிஐடி விசாரணை

பெங்களூருவில் உள்ள நாகரபாவியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரவியின் உடலுக்கு கர்நாடக‌ முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி பேசும்போது, “முதல்கட்ட விசாரணையில் தற்கொலையாக இருக்கலாம் என கருதுகிறேன். சம்பவ இடத்தில் தற்கொலைக்கான‌ குறிப்புகள் எதுவும் இல்லை. இதில் ஏதேனும் சதி நடந்துள்ளதா என விசாரித்து வருகிறோம்” என்றார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசும்போது “ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மிகவும் நேர்மையானவர். தனது கடமையில் இருந்தும், கொள்கையில் இருந்தும் என்றும் அவர் தவறியதில்லை. அவரது திடீர் இறப்பு மிகுந்த‌ கவலை அளிக்கிற‌து. இந்த துக்க சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கக்கூடாது. ரவிக்கு ஏதேனும் அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததா என விசாரணை நடந்து வருகிறது. ரவியின் வழக்கை சிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றியுள்ளேன்” என்றார்.