தாசில்தாரை தாக்கிய வழக்கு மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை.

Filed under: தமிழகம் |

தாசில்தாரை தாக்கிய வழக்கு மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை.

கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.கஅழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட கோர்ட்டில் நீதிபதி முத்துலெட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி முத்துலெட்சுமி, மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.