ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும். காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கருத்தரங்கில் தீர்மானம்.
திருச்சி மத்திய மண்டல காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் இன்று திருச்சி மீனாட்சி மஹாலில் நடந்தது. காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் கே. சந்திரமோகன் தலைமை தாங்கி கருத்துரை வழங்கினார்.
முன்னதாக மாவட்ட தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன் வரவேற்று பேசினார். மாநில வழக்கறிஞர் அணி துணை தலைவர் லட்சுமணன், ராஜேந்திரன் ராஜேந்திர குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத்தலைவர் சுப சோமு, காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில்
நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க பாடுபடுவது, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய உழைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் சந்திரமோகன் நிருபர்களிடம் கூறும்போது, நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும். தமிழகத்தில் பாஜகவில் வாக்கு வங்கி உயர்ந்திருப்பதாக சிலர் சொல்கிறார்கள். உண்மைதான். 4 சதவீதத்திலிருந்து 5% ஆக வாக்கு உயர்ந்திருக்கலாம். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்கு வங்கி உயரவில்லை என்பது நிதர்சன உண்மை. வட மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வது போன்று தமிழகத்தில் நடக்காது. மாறாக இங்கு புரட்சி வெடிக்கும். இது பெரியார் மண் என்பதை தமிழக மக்கள் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவார்கள் என்றார்.
மேலும் நிகழ்ச்சியில் விக்னேஸ்வரன், சுந்தர வடிவில், பொதுச் செயலாளர் கிருபா, சுகன்யா , சிவகாமி , மோகனாம்பாள் ,வனஜா ,விஜயா பாபு மற்றும் தஞ்சாவூர், புதுக்கோட்டை ,கரூர், பெரம்பலூர்,அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.